Tag Archives: குடும்பங்கள்

எங்கே சொந்தங்கள்?

10501920_884121631634133_7299086502154289706_n

கிழக்கில் வெள்ளி முளைக்கும் முன்,
கொண்டை சேவல் கூவும் முன்,
விடியல் வந்து ஊர் எழுப்பும் முன்,
உற்சாகமாய் துவங்குவோம் அந்நாளை…
உயிர்த்து நாங்கள் நடமாட
உயிரில்லா வீடும் என்றும் உயிர் பெறும்..

தாத்தா எழுந்து நடைக்கு செல்ல
பாட்டி அமர்ந்து கீரை அரிய
அம்மாவும் சித்தியும் உலையுடன்
சேர்ந்து பல கதைகள் கதைப்பர்
பாட்டியின் ஒத்தை அதட்டல் கேட்டு
சட்டென பேச்சை துறந்து விட்டு..
சைகையில் தான் நவரசம் படிப்பர்..

அண்ணன் எழுந்து குளிக்க சென்று
துவாலை கேட்டு அண்ணியை அழைக்க..
துவாலையுடன் சென்ற அண்ணி
திரும்பி வருவாள் ஈரத்தோடு..
நமட்டாய் சிரிக்கும் கூட்டம் கண்டு
அழகாய் தான் முகம் சிவந்திடுவாள்..
அப்பா சித்தப்பா குரல் கேட்டால்
உடனே கூடிய சபை கலைத்து
மீண்டும் தொடர்வோம் வேலைகளை..

குடும்பம் முழுதும் சேர்ந்தமர்ந்து
ஒன்றாய் களிப்போம் பலகாரம்..
மீண்டும் அனைவரும் சேரும் நேரம்
முழுதாய் வகுப்போம் ஒரு அட்டவணை..
அட்டவணை அதுப்படி நாள் கடக்க
இனிதாய் தான் தினம் நாள் முடியும்…

வீட்டில் யாரும் நோயில் விழ
வீடே துடிக்கும் அவர் வலியில்..
நோயில் விழுந்தவர் நோய் தீர
வேண்டுதல்கள் அவசரமாய் நிறைவேறும்..
ஆளுக்கு இரு பிள்ளைகள் இருந்தாலும்
அனைவரும் சமமென நடத்திடுவர்..
வாங்கி வந்த பண்டங்களை பிரித்து கொஞ்சம்
எமக்களித்து, அன்றே பழகிடுவர் பகிர்வதிற்கு..
சண்டைகள் நூறு வந்தாலும்
அன்றே பேசி தீர்த்திடுவோம்..
சின்னதாய் தவறுகள் செய்தாலும்
கண்டித்து அவைகளை திருத்திடுவோம்….
அதட்டி பேசி அழைத்தாலும்
என்றும் அன்பை உணர்திருந்தோம்..

சின்னதாய் ஒரு விசேஷம் வந்தாலும்
ரொம்ப பெரிதாய் தான் கொண்டாடி,
மகிழ்வாய் நிறைவாய் முடிப்போம் அந்நாளை..
தினமும் புதிதாய் தான் விடிந்தாலும்,
நாங்கள் ஒன்றாய் சேர்ந்திருந்த நாளெல்லாம்
நாங்கள் புதியாய் பிறந்த நாளன்றோ??
ஒன்றுவிட்ட சொந்தங்கள் கூட
நெருங்கி நின்ற காலம் அது..

இன்று இருக்கும் பிள்ளையிடம்
சொந்தம் சொல்லி கேட்கிறேன்..
சொந்தம் எது என புரியாமல்
குழம்பி தவிக்கிறாள் சிறுமியவள்..
சொந்தம் எல்லாம் பொதுவாய் போய்
வெறும் “அங்கிள்” “ஆன்ட்டி” ஆனதே..
அத்தான் அத்தாச்சி மச்சான் மச்சியும்
வரலாறில் வெறும் சொல்லாய் போனேதே..
சொந்தம் என்பது ஏட்டில் போக
வெறும் நட்பை மட்டுமே மதிக்கின்றனர்

இருந்த சொந்தங்கள் இல்லாமல்
குடும்ப கட்டுப்பாடு மாற்றியதோ??..
நாம் இருவர் நமக்கு பலர் மாறி
நாம் இருவர் நமக்கு இருவர் என்றாகி
இன்று நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றானதில்,
தொழில்நுட்பங்கள் பல்கி பெருகி
உலகம் சிறிதாய் தான் போனதில்,
மனதில் உள்ள ஈரம் வடிந்து
பொறுமையின் எல்லை சுருங்கியதில்,
இல்லாதே போகுதே கூட்டு குடும்பம்
வாழ்க்கையின் சுவையை என்றும் கூட்டிய குடும்பம்.

— ரம்யாராஜா

Leave a comment

Filed under வாழ்க்கை, Life, people