Monthly Archives: June 2015

கையளவு சாம்பல்

ganga_aarti

எந்தப் பறவை பறந்தாலும்
ஏற்கிறது வானம்,
எந்த சுரத்திலும் பிறக்கிறது
ஏழிசை கானம், ,
எந்த கைகள் யாசித்தாலும்
கொட்டுகிறது இயற்கை,
எந்த விழிகள் தொழுதாலும்
அன்பைத் தருகிறது மதங்கள்,
எந்த விரல் பட்டாலும்
பூக்கள் சிரிக்கின்றன,
எவர் நீர் ஊற்றினாலும்
உள்வாங்குகிறது வேர்,
எந்த கண்களுக்கும்
ஏழு நிறத்தை காட்டுகிறது
வானவில்,
எவர் கிழித்தாலும்
ஏழு நாட்களாய் உள்ளது
நாட்காட்டி,
எவர் நின்றாலும்
நிழல் அளிக்கிறது மரம்,
எவர் வீழ்ந்தாலும்
தாங்குகிறது பூமி,

இதற்கிடையில் நானென்ன நீயென்ன?
முடிவில் எல்லாம் ஒரு கையளவுச்சாம்பல்.

— புதுவை காயத்திரி

Advertisements

1 Comment

Filed under Life, past, people

குட்டி ஜப்பான் எனப்படும் கந்தக பூமி

640px-Making_of_Bomb_Shells

டமால், டுமீல் என காதை கிழிக்கும் ஒசை என்றாலும் சரி, சத்தமில்லாமல் வானத்தில் பூப்பூவாய் வர்ணஜாலம் காட்டுவதானாலும் சரி. மற்றவர்களை மகிழ்விப்பதில் என்னை மிஞ்ச யாராலும் முடியாது. பட்டாசாகிய நான் உருவாகும் கதையைக் கேட்டால் கல்நெஞ்சக்காரர்களின் கண்களும் கலங்கும். பலரது கைகளில் பலவிதமாய் உருவாகும் என் வளர்ச்சியின் பின்னால் பல தொழிலாளர்களின் வாழ்க்கை உள்ளது.

குட்டி ஜப்பான் சிவகாசி

அச்சுத் தொழிலும், தீப்பெட்டித் தொழிலும் நிறைந்துள்ள குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியை சுற்றித்தான் நான் உருவாகும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. அந்த மண்ணும், அங்கு நிலவும் சீதோஷ்ண நிலையும் எனக்கான இடமாகிப் போனதால் நான் குடிசைத் தொழில்போல பல்கிப் பெருகினேன். நான் சிவகாசிக்கு வந்தது தனிக் கதை.

அந்நியச் செலவாணி

இந்தியாவிலேயே முதன் முதலாக நான் மேற்கு வங்கம் மாநிலத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டேன். பல ஆண்டுகள் கழித்து சிவகாசியை சேர்ந்த தொழிலதிபர்கள் சிலர் சீனா சென்று என்னை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பத்தை கற்று வந்தனர். இதன் பின்னர் மளமளவென வளர்ந்து இன்றைக்கு பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கிறேன்.

ஆண்டொன்றுக்கு மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை பெற்றுத் தருகிறேன். 1960 களில் தொடங்கிய என் பயணம் இன்று 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளாக வளர்ந்து நிற்கிறது. நாட்டிற்கு ஆண்டு தோறும் பல கோடி ரூபாய்க்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தருவதில் என் பங்கும் முக்கியமானது என்பதில் எனக்கு பெருமைதான்.

என்னதான் கோடிக்கணக்கான வருமானம் கிடைத்தாலும் என்னை தயாரிக்க தினந்தோறும், கந்தகத்திலும், கரிமருந்திலும், வெந்து உழலும் தொழிலாளர்கள் பலரையும் பார்த்து பார்த்து மனம் நொந்து அந்த வேதனை தாங்காமல் நானே வெடிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறேன். இதில் பலியாவது என்னவோ அப்பாவிகள்தான்.

விபத்தாக மாறிப்போன வாழ்க்கை

அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும் அதைப்பற்றி எல்லாம் கோடி கோடியாய் சம்பாதிக்கும் எந்த முதலாளியும் கவலைப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கான எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் யாரும் செய்து தருவதில்லை. உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்றாலும் காலை 8 மணிக்கு அரக்க பரக்க வீட்டில் இருந்து தொழிற்சாலைக்கு கிளம்பிவிடுகின்றனர் தொழிலாளர்கள். அடிக்கடி நடக்கும் விபத்துகளினால் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பம் கரிமருந்தில் கருகிய செடியாய் துளிர்க்காமல் அடங்கிப்போகும். ஆபத்தான தொழில் என்று அறிந்தும் தவிர்க்க முடியாமல் இதில் சிக்கித்தவிப்பவர்கள் பலர்.

என்னை நம்பி, குழாய் உருட்டுதல், திரிசெய்தல், மருந்து அடைத்தல் என கிராமங்களில் சார்புத் தொழில் செய்பவர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுவதுபோல தொழிற்சாலைகளின் நிகழும் வெடி விபத்து காலங்களில் இவர்களின் வாழ்க்கைதான் முடங்கிப்போகும்.

சந்தோசமாய் வெடிப்பேன்

தீபாவளி மட்டும் என்றில்லை கோவில் திருவிழாவோ, தேர்தலோ எதுவென்றாலும் வெற்றியைக் கொண்டாட என்னைத்தான் கொளுத்திப் போடுகின்றனர். என் வெடிச்சத்தம்தான் பிறருக்கு கொண்டாட்டமாய் இருக்கிறது. என்னை அழித்துகொண்டு பிறரை மகிழ்விப்பதில் எனக்கு சந்தோசம்தான். ஆனால் பாடுபட்டு என்னை உருவாக்கும் கரங்களுக்கு பரிசாக நான் எதையும் தருவதில்லை என்பதை எண்ணும்போதுதான் எனக்குள் லேசாக வலிக்கிறது. பிறருடைய மனங்களில் மத்தாப்பு பூக்கவைக்க பாடுபடும் தொழிலாளர்களுக்கு என்றைக்கு பாதுகாப்பான வாழ்க்கை அமைகிறதோ அன்றைக்குத்தான் உண்மையிலேயே சந்தோச சிரிப்புடன் நான் வெடித்துச் சிதறுவேன்.

Leave a comment

Filed under Life, people

எங்கே சொந்தங்கள்?

10501920_884121631634133_7299086502154289706_n

கிழக்கில் வெள்ளி முளைக்கும் முன்,
கொண்டை சேவல் கூவும் முன்,
விடியல் வந்து ஊர் எழுப்பும் முன்,
உற்சாகமாய் துவங்குவோம் அந்நாளை…
உயிர்த்து நாங்கள் நடமாட
உயிரில்லா வீடும் என்றும் உயிர் பெறும்..

தாத்தா எழுந்து நடைக்கு செல்ல
பாட்டி அமர்ந்து கீரை அரிய
அம்மாவும் சித்தியும் உலையுடன்
சேர்ந்து பல கதைகள் கதைப்பர்
பாட்டியின் ஒத்தை அதட்டல் கேட்டு
சட்டென பேச்சை துறந்து விட்டு..
சைகையில் தான் நவரசம் படிப்பர்..

அண்ணன் எழுந்து குளிக்க சென்று
துவாலை கேட்டு அண்ணியை அழைக்க..
துவாலையுடன் சென்ற அண்ணி
திரும்பி வருவாள் ஈரத்தோடு..
நமட்டாய் சிரிக்கும் கூட்டம் கண்டு
அழகாய் தான் முகம் சிவந்திடுவாள்..
அப்பா சித்தப்பா குரல் கேட்டால்
உடனே கூடிய சபை கலைத்து
மீண்டும் தொடர்வோம் வேலைகளை..

குடும்பம் முழுதும் சேர்ந்தமர்ந்து
ஒன்றாய் களிப்போம் பலகாரம்..
மீண்டும் அனைவரும் சேரும் நேரம்
முழுதாய் வகுப்போம் ஒரு அட்டவணை..
அட்டவணை அதுப்படி நாள் கடக்க
இனிதாய் தான் தினம் நாள் முடியும்…

வீட்டில் யாரும் நோயில் விழ
வீடே துடிக்கும் அவர் வலியில்..
நோயில் விழுந்தவர் நோய் தீர
வேண்டுதல்கள் அவசரமாய் நிறைவேறும்..
ஆளுக்கு இரு பிள்ளைகள் இருந்தாலும்
அனைவரும் சமமென நடத்திடுவர்..
வாங்கி வந்த பண்டங்களை பிரித்து கொஞ்சம்
எமக்களித்து, அன்றே பழகிடுவர் பகிர்வதிற்கு..
சண்டைகள் நூறு வந்தாலும்
அன்றே பேசி தீர்த்திடுவோம்..
சின்னதாய் தவறுகள் செய்தாலும்
கண்டித்து அவைகளை திருத்திடுவோம்….
அதட்டி பேசி அழைத்தாலும்
என்றும் அன்பை உணர்திருந்தோம்..

சின்னதாய் ஒரு விசேஷம் வந்தாலும்
ரொம்ப பெரிதாய் தான் கொண்டாடி,
மகிழ்வாய் நிறைவாய் முடிப்போம் அந்நாளை..
தினமும் புதிதாய் தான் விடிந்தாலும்,
நாங்கள் ஒன்றாய் சேர்ந்திருந்த நாளெல்லாம்
நாங்கள் புதியாய் பிறந்த நாளன்றோ??
ஒன்றுவிட்ட சொந்தங்கள் கூட
நெருங்கி நின்ற காலம் அது..

இன்று இருக்கும் பிள்ளையிடம்
சொந்தம் சொல்லி கேட்கிறேன்..
சொந்தம் எது என புரியாமல்
குழம்பி தவிக்கிறாள் சிறுமியவள்..
சொந்தம் எல்லாம் பொதுவாய் போய்
வெறும் “அங்கிள்” “ஆன்ட்டி” ஆனதே..
அத்தான் அத்தாச்சி மச்சான் மச்சியும்
வரலாறில் வெறும் சொல்லாய் போனேதே..
சொந்தம் என்பது ஏட்டில் போக
வெறும் நட்பை மட்டுமே மதிக்கின்றனர்

இருந்த சொந்தங்கள் இல்லாமல்
குடும்ப கட்டுப்பாடு மாற்றியதோ??..
நாம் இருவர் நமக்கு பலர் மாறி
நாம் இருவர் நமக்கு இருவர் என்றாகி
இன்று நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றானதில்,
தொழில்நுட்பங்கள் பல்கி பெருகி
உலகம் சிறிதாய் தான் போனதில்,
மனதில் உள்ள ஈரம் வடிந்து
பொறுமையின் எல்லை சுருங்கியதில்,
இல்லாதே போகுதே கூட்டு குடும்பம்
வாழ்க்கையின் சுவையை என்றும் கூட்டிய குடும்பம்.

— ரம்யாராஜா

Leave a comment

Filed under வாழ்க்கை, Life, people

காக்கா — The Crow

113da5b33386ae888c2779c688f13f14

நம்மை சுற்றி எப்போதும் இருப்பதாலோ என்னவோ காக்கைகளைப் பற்றி நாம் எப்போதும் அதிகம் கண்டுகொள்வது கிடையாது. ஆனால் பறவை இனங்களிலேயே மிகவும் புத்திசாலியானது என்று கருதப்படுவது நம் காக்கையார் தான். தமிழர்களுக்கும் காக்காவுக்கும் வாழ்வியல் சம்பந்தமான நிறைய தொடர்பு உள்ளது. எங்க ஊரு காக்காக்கள் எங்களுக்கு நிறைய பாடங்கள் சொல்லி கொடுத்திருகின்றன முதல் சீன்ல பாட்டி சுட்ட வடைய திருடிவிட்டு வந்த அதே காக்கா தான் அடுத்த சீன்ல புத்திசாலிதனமாக கொஞ்சமா தண்ணி இருந்த குடுவைல கல்ல போட்டு தண்ணி குடிச்சிட்டு போச்சு.

சென்னையில் இருந்த போது என் அம்மா தினமும் மதிய உணவிற்கு பிறகு ஒரு காக்காவிற்கு ஏதாவது சாப்பிட வைப்பார்கள். தவறாமல் தினமும் அதே நேரத்திற்கு வந்து முதலில் அமைதியாக இருக்கும். ஏதாவது வேலையாக இருந்து ஆகாரம் வைக்க சில நிமிடங்கள் தாமதம் ஆனால் ஒரெ ஒரு முறை “கா” என்று கத்தும். அப்படியும் தாமதம் ஆனால் தன் மூக்கினால் ஜன்னல் கண்ணாடியை கொத்தும். வேறு ஏதாவது ரூமில் இருந்தால் மற்ற ஜன்னல்களில் சென்று இதையே செய்யும். ஒரு நாளும் சாதம் உண்ணாது, சப்பாத்தி, பூரி, தோசை, பக்கோடா இது மாதிரி ஏதாவது டிபன் ஐட்டம் மட்டும் தான் சாப்பிடும்.

நம் முன்னோர்கள் காக்கையை மையமாக வைத்து பல பழமொழிகளை சொல்லிருகிரார்கள். அவற்றில் எனக்கு பிடித்த சில

  • காகம் திட்டி மாடு சாகாது
  • கூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காக்கா
  • முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
  • காக்கா உட்கார பணம் பழம் விழுந்த கதை

இந்து மதத்தில் இறந்தவர்களின் பிரதிநிதியாகக் காகம் கருதப்படுகிறது. இறந்தவர்களுடைய நினைவு நாட்களின்போது படைக்கப்படும் உணவை தின்ன காகத்தின் வரவு பெரிதும் எதிர்பார்க்கப்படும். வைதீக குடும்பங்களில் முதலில் காக்கைக்கு சோறு போட்டபின்னர்தான் வீட்டிலுள்ளோருக்கு உணவு.

குழந்தையாய் இருக்கையில் நம் முன் வடையை திருடி திரிந்த காகமாய் இறந்தபின் மனிதன் மாறிவிட்டான் என போற்றபடுவது தானோ வாழ்க்கையின் சாராம்சம்.

Leave a comment

Filed under exclusive interview, Life, people